காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ராஜஸ்தானில் இன்னும் சரியாக ஒரு வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு எதிரொலிதான். இதுவே இம்மாநிலத்தில் பா.ஜ.க. அரசு அமைவதற்கான மக்களின் அழைப்பு.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு அருமையான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ராஜஸ்தானை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் தீர்மானம். அதேபோல, ராஜஸ்தானில் ஊழல் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் தீர்மானமாகும்.
எல்லாவற்றும் மேலாக, நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே பா.ஜ.க.வின் தீர்மானம். ராஜஸ்தான் மாநிலத்துக்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உங்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இது இந்த மோடியின் உத்தரவாதம்.
எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் பயங்கரவாதம், அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. எல்லாமே காங்கிரஸின் சமாதான அரசியலால் வந்ததுதான். ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் எந்த நிலைக்கும் போகும். மாநிலத்தில் பெண்களின் நம்பிக்கையை காங்கிரஸ் உடைத்துவிட்டது.
பெண்கள் போலியான பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறும் முதல்வரால், அம்மாநில பெண்களை காப்பாற்ற முடியுமா?. இப்படிப்பட்ட பெண் வெறுப்புக் கட்சியை தண்டிக்க வேண்டும். மாநில பெண்களிடம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கீழ்த்தரமான மனநிலை இருக்கிறது. ராஜஸ்தான் ஆண்களின் நாடு என்பதால் பலாத்காரம் நடக்கிறது என்கிறார்கள்.
ஒருபுறம், உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மறுபுறம், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஊழல், கலவரம், குற்றச்செயல்களில் ராஜஸ்தானை காங்கிரஸ் முதன்மை மாநிலமாக்கி இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது காங்கிரஸின் பொறுப்பு. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான குற்றங்களும், வன்கொடுமைகளும் அதிகரித்திருக்கின்றன.
ஹோலியோ, ராமநவமியோ, அனுமன் ஜெயந்தியோ, எந்தவொரு பண்டிகையையும் மக்கள் இங்கு அமைதியாக கொண்டாட முடியாது. காரணம், ராஜஸ்தானில் கலவரம், கல்வீச்சு, ஊரடங்கு உத்தரவு எல்லாம் தொடர்ந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது.
சமீபத்தில் நாடு முதல் தலித் தலைமை தகவல் ஆணையரைப் பெற்றது. அவர் பெயர் ஹிராலால் சமாரியா. அவர்கள் தீக் கிராமத்தில் வசிப்பவர்கள். ஆனால், தலித் அதிகாரி நியமனம் காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. ஒரு தலித் அதிகாரி உயர் பதவிக்கு வருவதை காங்கிரஸால் பார்க்க முடியாது. ராம்நாத் கோவிந்தை எதிர்த்ததும், பாபா சாகேப் அம்பேத்கரை எப்போதும் அவமதித்ததும் இதே காங்கிரஸ்தான்” என்று பிரதமர் மோடி கூறினார்.