காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜோத்பூரில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறுகையில், “ராஜஸ்தான் பண்பட்ட மக்களின் நிலம். ஆனால், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று மாநிலத்தின் ‘ஆன், பான், ஷான்’களுக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த விஷயங்கள் ராஜஸ்தானுக்கு கிரஹனம் போன்றது. இந்த கிரஹனம் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 3-ம் தேதிகளில் முடிவடையும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஊழல், கொள்ளை, முறைகேடுகள் இருக்கும். அதேசமயம், பா.ஜ.க. இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. அதேபோல, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கார்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று அனைத்து கார்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இருந்தியா மாறி இருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் பெண்கள் மேம்பாட்டிற்காக காஸ் சிலிண்டருக்கு 450 ரூபாய் மானியம் வழங்க முயற்சிப்போம். புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், மதிய உணவு, சுரங்கம் மற்றும் உரம் போன்றவற்றில் ஊழல் செய்தவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.