சிங்கப்பூர் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா சென்றிருந்தார். தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, இந்திய தேசிய இராணுவத்திற்கான நினைவிடத்தில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நினைவிடம் அமைப்பதற்காக 1945-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அடிக்கல் நாட்டினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய இராணுவத்தின் அடையாளம் தெரியாத வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
Paid homage at the INA Memorial marker in Singapore. My heartfelt tributes to the ‘Unknown Warriors’ of the INA. pic.twitter.com/lXnz2R8AlG
— Rajnath Singh (@rajnathsingh) November 18, 2023
தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான சீனிவாசப் பெருமாள் கோவிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Feeling blessed after offering prayers at Sri Srinivasa Perumal temple in Singapore. pic.twitter.com/EWZpiAgqKJ
— Rajnath Singh (@rajnathsingh) November 18, 2023