‘டீப் பேக்’ எனப்படும் போலி வீடியோக்கள் தொடர்பாக, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த போலி வீடியோக்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இந்த வகை வீடியோக்கள் ‘டீப் பேக்’ வீடியோக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தனது கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, ‘செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ, சமூகத்தில் நெருக்கடிக்கு வழிவகுக்கும்’ என்று எச்சரித்தார்.
இந்த நிலையில், புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “டீப் பேக் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அனைத்து சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
எனினும், இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இது தொடர்பாக விரைவில் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசின் சலுகைகளை இந்நிறுவனங்கள் பெற முடியாது” என்றார்.