தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகியவை டெல்டா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை, படிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காகச் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் சென்று வருகின்றனர்.
தஞ்சையில் நேரடி விமானச் சேவை இல்லாததால், திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், நேரம், செலவு அதிகம் ஆவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிறிய நகரங்களை விமானச் சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூரில் இருந்து பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமானப்படைத்தளம் உள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல், இங்கிருந்து 20 இருக்கைகளைக் கொண்ட சிறிய விமானங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்குப் பறக்கலாம். இதேபோல, இராமநாதபுரம், வேலூர், நெய்வேலியிலும் பயணிகள் விமான சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.
புதிய விமானச் சேவையால் டெல்டா மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.