அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை, திமுக அமைச்சர் சேகர் பாபு மறைப்பதாக, பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணக் கொள்ளை பக்தர்களைப் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பக்தர்களிடமிருந்து பணம் நேரடியாக வாங்கிக் கொண்டு, ஒரு சிலர் முறைகேடாக அனுமதிக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தரிசன கட்டணம் விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மதித்து செயல்படுத்த வேண்டும். மாறாக, கட்டணக் கொள்ளையில் அறநிலையத்துறையே ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.
ஆனால், கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆர்வம் காட்டி வருகிறார்.
எனவே, திருச்செந்தூரில் உயர்த்தப்பட்டுள்ள தரிசன கட்டணத்தை உடனே திரும்பப்பெற வேண்டும், சுவாமி தரிசனம் செய்யக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.