உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 9வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் லைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மீட்புப்பணிக்கு தேவையான கருவிகள் மற்றம் அனைத்து உதவிகளை மத்திய அரசு அளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்புடன் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், தொழிலாளர்களின் மன உறுதியை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே மீட்புப்பணியில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவர்கள் சுரங்கப்பாதையின் பிரதான நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்னால்ட் டிக்ஸ், எங்கள் குழுவினர் முழுவதும் இங்கு உள்ளனர். மீட்புப்பணிகள் நன்றாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.