ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, டிரஸ்ஸிங் அறைக்கு (Dressing room) சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இந்த போட்டியை பிரதமர் மோடி நேரடியாக கண்டு ரசித்தார். எனினும் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பல வீரர்கள் உணர்வசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
இதனையடுத்து டிரஸ்ஸிங் அறைக்கு சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களை தேற்றி ஆறுதல் படுத்தினார். மேலும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவுரைகளை அவர் வழங்கினார்.
இதுதொடர்பாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களுக்கு இந்த தொடர் அருமையாக அமைந்தது. எனினும் முடிவு சரியாக அமையவில்லை. இதனால் நாங்கள் உடைந்து போனோம். ஆனால் பொதுமக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து நடைபோட வைக்கிறது.
எங்களின் டிரஸ்ஸிங் அறைக்கு பிரதமர் மோடி வந்தது ஊக்கம் தந்தது மிகவும் சிறப்பான நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.