திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கையால், தெலங்கானா மாநிலத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் கடன்கார மாநிலமாக்கி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.
தெலங்கானாவில் வருகிற 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் கே.சி.ஆர். தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால், மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
மேலும், தெலங்கானாவைப் பொறுத்தவரை, பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களாக தெலங்கானாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் ஜங்கான், ஜக்தியால் ஆகிய இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, “தெலங்கானாவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் காங்கிரஸ் ஆகியவை 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி கட்சிகள். 2ஜி என்றால் 2 தலைமுறை கட்சி. இது கே.சி.ஆர். மற்றும் அவரது மகன் கே.டி.ராமராவ் ஆகியோரைக் குறிக்கிறது.
அதேபோல, 3ஜி என்றால் 3 தலைமுறை கட்சி. இது அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியைக் குறிக்கிறது. 4ஜி என்றால் 4 தலைமுறைக் கட்சி. இது ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி என 4 தலைமுறைகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை குறிக்கிறது.
முதல்வர் கே.சி.ஆர். ஜங்கானில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
முதல்வர் கே.சி.ஆரின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் நில அபகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் தெலங்கானாவை ராஜாக்கள் மற்றும் நிஜாம்களிடமிருந்து விடுவித்தார்.
ஆனால், ஒவைசிக்கு பயந்து தெலங்கானா விடுதலை நாளைக்கூட கொண்டாட கே.சி.ஆர். மறுத்துவிட்டார். ஆனால், ஓவைசிக்கு நாங்கள் பயப்படவில்லை. ஐதராபாத் மீட்பு தினத்தை மாநில தினமாக கொண்டாடுவோம்.
மேலும், எங்கள் அரசு அமைந்தவுடன் 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டை நீக்கி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறோம். ஒவைசிக்கு பயந்து கே.சி.ஆர். திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறார்.
கே.சி.ஆரின் தேர்தல் சின்னம் கார். ஆனால், கே.சி.ஆர்., கே.டி.ஆர்., கவிதா ஆகியோரிடம் காரின் ஸ்டீயரிங் இல்லை. ஒவைசியிடம் இருக்கிறது. ஆகவே, தெலங்கானாவை குடும்ப அரசியலில் இருந்து விடுவிப்போம்.
முதல்வர் கே.சி.ஆர். தெலங்கானாவை ஊழலின் மையமாக மாற்றி இருக்கிறார். தெலங்கானா உருவானபோது உபரி மாநிலமாக இருந்தது. ஆனால், கே.சி.ஆரின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கைகளால் மாநிலம் மிகப்பெரிய பொருளாதார கடனை எதிர்கொண்டிருக்கிறது.
3 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்க வைத்திருக்கிறார். ஆகவே, வரும் தேர்தலில் உங்கள் ஓட்டு தெலங்கானா மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
குவிண்டால் 3,100 ரூபாய் என்கிற விலையில் நெல் கொள்முதல் செய்ய பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தை பா.ஜ.க. செலுத்தும். 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவை பா.ஜ.க. ஏற்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம். இத்தேர்தலில் நீங்கள் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்தால், உங்கள் அனைவருக்கும் அயோத்தி இராமர் கோவிலில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வோம்” என்றார்.