தமிழகத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய, கடந்த 15-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாளை வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடப்பு 2023-24 -ம் ஆண்டுச் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.34,200/- கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதமாகும்.
அந்த வகையில், ரூ.613/- காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்தினால் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள முடியும்.
கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யக் கடைசி நாள் நவம்பர் மாதம் 15 -ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்தக் காலக்கெடு தற்போது நாளை வரை, அதாவது 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.