தமிழகத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை கைது செய்துள்ளனர்.
மேலும், சமீபத்தில் தமிழக ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். அவருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும், வட மாநில தொழிலாளர் போர்வையில் வங்க தேசத்தினர் பலர் தமிழ்நாட்டில் ஊடுருவி உள்ளதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகக் காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு துவங்க அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஐஜி தலைமையில் செயல்படும் இந்தப் பிரிவில் 4 கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள் செயல்படுவார்கள்.
மேலும், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவுக்காகத் தேர்வு செய்ய, தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.