அதிவேக ரயில் பாதைகளை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கிய டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி – மீரட் அதிவேக ரயில் திட்டத்திற்காக, தனது பங்காக ரூ.1,180 கோடியை அளிக்க டெல்லி அரசு ஒப்புக்கொண்டது. தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (என்சிஆர்டிசி), மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனினும், மீதமுள்ள இரண்டு பகுதிகளுக்கு நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ள டெல்லி அரசாங்கம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் 3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவை டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
டெல்லி அரசு கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக ரூ.1,100 கோடி செலவழித்ததை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு வழங்கும் நிதி அதனை விட குறைவு என சுட்டிக்காட்டியது.
மேலும் திட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்குள் ரூ.415 கோடி வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதியை வழங்காத டெல்லி அரசிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ஒரு வாரத்திற்குள் நிதியை மாற்றாவிட்டால், டெல்லி அரசின் விளம்பர நிதியை RRTS திட்டத்திற்கு மாற்ற உத்தரவிடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் டெல்லி அரசை எச்சரித்துள்ளது.