உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை கார்த்திகை மாத பிறப்பு மற்றும் மண்டல பூஜையையொட்டி, கடந்த 16 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் தொடங்கினர்.
நடை திறக்கபட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்களின் தரிசன நேரம் 14 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் கூட்டப்பட்டு 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.
பொதுவாக, சபரிமலையில் மாதாந்திர பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களில் காலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்குச் சாத்தப்படும். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தற்போது தரிசன நேரம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 -ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், திருக்கோவில் நடை 3 நாட்கள் மூடப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 -ம் தேதி திறக்கப்படும்.
மகர ஜோதி தரிசனம் ஜனவரி 15 -ம் தேதி நடைபெற உள்ளது. படிபூஜை முடிந்து ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை சாத்தப்படும்.
சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.