மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15 -வது ஆண்டு அனுசரிக்கும் வகையில், லஷ்கர் இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மறக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.
இந்த தாக்குதலில், கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் ஆகிய 2 இஸ்ரேலியர்கள் உட்பட 6 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2008 -ம் ஆண்டு நவம்பர் 26 -ம் தேதி அன்று நடந்த கொடூரமான இந்த தாக்குதல், அமைதியை நாடும், நாடுகள் மற்றும் சமூகங்கள் இடையே இன்னும் இது எதிரொலிக்கிறது.
வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, இஸ்ரேல் அரசு மீண்டும் ஒரு முறை இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், சிறந்த, அமைதியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், இந்தியாவுடன் இஸ்ரேல் ஒன்றுபட்டு நிற்பதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முடிவு இஸ்ரேல் அரசின் சுதந்திரமான முடிவு என்றும், இந்திய அரசு எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
தங்களது நாட்டிற்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகளை மட்டுமே, இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து வந்த இஸ்ரேல் அரசு, தற்போது, முதன் முறையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.