ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையும், பிரதமர் மைதானத்தில் இருந்ததையும் தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்ததே காரணம் என்ற வகையில் பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு என்ன நேர்ந்தது ராகுல் காந்தி? நாட்டின் பிரதமருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். நமது பிரதமர் வீரர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. எனவே ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பிரசாத் கூறினார்.
“கடந்த காலத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாயார் சோனியா காந்தி நரேந்திர மோடிக்கு எதிராக சர்சைக்குரிய கருத்து தெரிவித்தார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று பாருங்கள் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.