விமானம் மூலம் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் இருமுடி பையில் நெய் தேங்காய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தா்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்கிறார்கள். அப்போது, இருமுடி பையில் நெய் நிரப்பப்பட்ட தேங்காயுடன், வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள் மற்றும் இதர காணிக்கை பொருள்கள் இருக்கும்.
ஐயப்ப பக்தர்கள், விமானத்தில் இருமுடி எடுத்து செல்வதில், பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான பயணத்தைப் பெரும்பாலான பக்தா்கள் தவிர்த்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அதேபோல், இந்த ஆண்டும், விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இரண்டு நெய் தேங்காய்களை எடுத்து செல்ல தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 2024-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து, செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இருமுடி பையில் நெய்யுடனான தேங்காயைக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.