காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முன்வந்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், இன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இஸ்ரேல் பிணைக் கைதிகள் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்திருக்கும் செய்தியை வரவேற்கிறோம். அதேசமயம், பிணைக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்.
சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைக்கிறது மற்றும் ஒருவரையொருவர் இணைக்கிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்மறையான விளைவுகளைப் பற்றி உலகம் கவலை கொண்டிருக்கிறது. AI-க்கான உலகளாவிய விதிமுறைகளில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.
டீப்ஃபேக் சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொண்டு, நாம் முன்னேற வேண்டும். AI மக்களைச் சென்றடைய வேண்டும். அதேசமயம், அது சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.