கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 24-ஆம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக, தெக்கமூடு பண்ட் காலனி, முறிஞ்சாபாலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், நேற்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்தது. கோட்ட தட்டி மற்றும் சென்னீர்கரை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று மாவட்டத்திற்கு ரெட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பக்தர்கள் அந்த வழியாகச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாகப் பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். இது சபரிமலை பக்தர்கள் மற்றும் யாத்திரை பயணங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.