நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை பெய்தது.
குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் பேரிகேடுகள் அமைத்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை வழியாக சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை இரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், வருகிற 25-ஆம் தேதி வரை மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே தரைப்பாலங்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.