எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியாவிடை கொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும், பா.ஜ.க. 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனவே, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
இந்த சூழலில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்ட உத்திகளுடன் வகுப்புவாத மோதல்கள் நடந்தன.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் சாப்ரா, பில்வாரா, கரௌலி, ஜோத்பூர், சித்தோர்கர், நோஹர், மேவாட், மல்புரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் திட்டமிட்ட கலவரங்கள் நடந்தன. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலவரக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சமாதான அரசியலில் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. அதேபோல, சலாசரில் இராமர் கோவில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. ஆல்வாரில் துளையிடும் இயந்திரம் மூலம் சிவலிங்கம் உடைக்கப்பட்டது. கத்துமாரில் பசுக் கொட்டகை புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது.
இதுபோன்ற பல சம்பவங்களை ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். லால் டைரி காங்கிரஸின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை.
இது தவிர, அமைச்சரின் பீரோவில் இருந்து 2.35 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று முதல்வர் அசோக் கெலாட் எதிர்வினையாற்றுகிறார். இவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு, மிகவும் சாதாரணமாக நடந்து கொள்ளும் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை.
கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு விஜயம் செய்து வருகிறேன். குறிப்பாக, மாநிலம் முழுவதும் சென்று வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன், ராஜஸ்தானில் அடுத்த அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உருவாகிறது.
ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும் என்கிற மனநிலையிலேயே மக்கள் இருக்கிறார்கள். ஆகவே, மூலை முடுக்கெல்லாம் தோல்வியை பரிசாகக் கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்” என்றார்.