மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தியோகர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க.வின் பலத்தை அறியாதவர்கள் பலர் உள்ளனர். மோடியை திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வை உருவாக்கியது எங்கள் கட்சித் தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.
எங்களது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் பா.ஜ.க.வின் கொடியை உயர்த்திப் பிடிக்கும் விதம் பாராட்டுக்குரியது. இதை நான் மாநிலம் முழுவதும் பார்த்திருக்கிறேன். ராஜஸ்தானில் உள்ள பெண்கள் காங்கிரஸை ஒரு கணம் கூட பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
தற்போதைய அரசில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போல ராஜஸ்தான் மாநிலம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானின் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நான் நேற்று உறுதியாகச் சொன்னேன். ராஜஸ்தானை கலவரம், குற்றம், ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் நம்பர் 1 இடத்திற்கு காங்கிரஸ் கட்சி உயர்த்தி இருக்கிறது.
அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்துவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தியது. டிசம்பர் 3-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.