டெல்லி அணியில் இருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரு வீரர்களையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்னும் 4 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அணிகளுக்கு இடையில் வீரர்களை டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அனைத்து அணிகளும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து மும்பை அணி ரொமாரியோ செப்பர்டை ஒப்பந்தம் செய்தது.
அதேபோல் இன்று ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இரு வீரர்களையும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேட் செய்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் டெல்லி, கேகேஆர், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளும் டிரேட் செய்ய முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லி அணி தரப்பில் மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் இருவரையும் டிரேட் செய்ய முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த அணிகளும் இந்த இரு வீரர்களையும் டிரேட் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் டெல்லி அணி நிர்வாகிகள் இந்த இரு வீரர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் விளையாடாத காரணமாக டெல்லி அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இம்முறை ரிஷப் பண்ட் மீண்டும் வரவுள்ளதால், மிடில் ஆர்டரில் களமிறங்கும் மற்ற இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் மினி ஏலத்திற்கு முன் பார்மில் இல்லாத வீரர்களை வெளியேற்றிவிட்டு, ஏலத்தின் போது, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை தேடி பிடிக்க டெல்லி அணி ஆயத்தமாகி வருகிறது.