இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் தனக்கு எக்ஸ் பக்கத்தில் கணக்கு இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவரை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இணைத்து பல செய்திகள் வெளியாகி உள்ளது.
இவர் தனது சகோதரருடன் எடுத்த புகைப்படங்களை AI தொழில்நுட்பம் மூலம் சுப்மன் கில் புகைப்படத்தை பொருத்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்று எக்ஸ் தளத்தில் சாரா பெயரில் இருந்து கில்லுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் பெயரில் போலிக்கணக்குகள் தொடங்கி பணம் செலுத்தி ப்ளு டிக் பெற்று சர்ச்சை பதிவுகள் வந்தது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தனக்கு எவ்வித கணக்கு இல்லை என சாரா, இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனக்கு எக்ஸ் பக்கத்தில் எந்தவித அதிகாரப்பூர்வ கணக்கும் கிடையாது. இதன் காரணமாக எக்ஸ் நிர்வாகம் சம்மந்தப்பட்ட கணக்குகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “சமூக ஊடகங்கள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, துக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான இடம். இருப்பினும், இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
எக்ஸ் தளத்தில் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது மாதிரியான போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் என்னிடம் கணக்கு இல்லை. மேலும் எக்ஸ் அத்தகைய கணக்குகளைப் அறிந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.