குரு தேஜ் பகதூரின் வாழ்க்கை முறையும், போதனைகளும் நம் அனைவரிடமும் தேசிய உணர்வைத் தொடர்ந்து விதைக்கட்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குரு தேஜ் பகதூரின் தியாக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் சீக்கியர்களின் பத்து குருமார்களில் ஒன்பதாவது குருவாக உள்ளார். குரு தேஜ் பகதூர் முகாலாயர்களுக்கு எதிராக இருந்ததால், 1675-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி முகலாய அரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
இவர் பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் கற்பித்தார். பேராசையிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மிகத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்று போதித்தார்.
குரு தேஜ் பகதூரின் தியாக தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: குரு தேஜ் பகதூர் அவர்களின் தியாக தினத்தையொட்டி அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.
குரு தேஜ் பகதூர் மனித மாண்புகள், உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்தார். குரு தேஜ் பகதூர் அன்பு, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வழங்கினார். அவரது போதனைகள் மனிதக்குலத்திற்குச் சேவை செய்யவும், அனைவரின் ஒற்றுமையை மேம்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்தார்.
குரு தேஜ் பகதூர் அவர்களின் வாழ்க்கை முறையும், போதனைகளும் நம் அனைவரிடமும் தேசிய உணர்வைத் தொடர்ந்து விதைக்கட்டும் என்று கூறினார்.