தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான கண்மாய், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன.
முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை ஆற்றங்கரைகளில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். பொதுமக்களும் நீர்நிலைகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேறு காரணங்களுக்காகச் செல்ல வேண்டாம். ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் கவனமுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, சுருளி அருவியின் நீா் பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவிக்கு அதிக நீா்வரத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, சுருளி அருவியில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. மேலும், தண்ணீா் வரத்து குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.