மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, குன்னூர் – உதகை இடையே வருகிற 30-ஆம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வரையும் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், மேட்டுப்பாளையம் – குன்னூர் – உதகை இடையேயான மலை இரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண், பாறை மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
இப்பகுதியில், நிலவும் மோசமான கால நிலை காரணமாக, சீரமைப்பு பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், குன்னூர் – உதகை இடையே வரும் 30-ஆம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரையும் மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரயில்வே துறையினர் தண்டவாளங்களைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















