13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
ஆந்திர பிரதேசம் – சண்டிகர் ; ஜார்கண்ட் – கோவா ;ஜம்மு காஷ்மீர் – மத்திய பிரதேசம் ; பெங்கால் – மணிப்பூர் ; மகாராஷ்டிரா – திரிபுரா.
இதில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மத்திய பிரதேசம் அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது.
இப்போட்டியின் தொடக்கம் முதலே மத்திய பிரதேச அணி கோல்களை அடிக்க தொடங்கிவிட்டது. இதில் மணிப்பூர் அணியின் முகமது நிஜாமுதீன் 5 வது நிமிடத்தில் ஒரு அடித்து கோல் மழையை தொடங்கி வைத்தார்.
இவரைத் தொடர்ந்து 6 வது நிமிடத்தில் ஷான் க்ளென் ஒரு கோல் அடிக்க பின்னர் அக்ஷய் துபே 12 மற்றும் 15 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவு செய்தார்.
பின்னர் 2 ஆம் காலிறுதி தொடக்கத்தில் 16 வது நிமிடத்தில் முகமது நிஜாமுதீன் ஒரு கோலும் பின்னர் 36 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து அர்ஜுன் சர்மா 18 மற்றும் 21 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல் அடித்தார். பின்னர் 29 வது நிமிடத்தில் சத்திய சுவாமி ஒரு கோல் அடிக்க அவரைத் தொடர்ந்து ஹிமான்ஷு சானிக் 46 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அடுத்து 4 ஆம் காலிறுதியில் சௌரப் பாஷினே 50 மற்றும் 55 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவு செய்தார். இறுதியாக 57 வது நிமிடத்தில் ஸ்வப்னில் கவாட்கர் கோல் அடித்து கோல் மழையை நிறுத்தினார்.
இதனால் ஆட்டமுடிவில் மத்திய பிரதேசம் அணி 13-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு & காஷ்மீரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.