கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கே.சி.ஆர். முதல்வராக இருந்தும், மாநிலத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.
ஆகவே, மாநில மக்களும் கே.சி.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்படி, இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூர் நகரில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல்வர் கே.சி.ஆர்., தனது மகன் கே.டி.ஆருக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் செய்த குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
கே.சி.ஆர். செய்த அனைத்து மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும். ஊழல் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கைப்பற்றி, வணிக வளாகங்களை கட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கே.சி.ஆர். தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் பி.ஆர்.எஸ். கட்சி தேர்தல் சீட்டை வியாபாரம் செய்கிறது.
ரசாகர்கள் (முஸ்லீம் பிரிவினர்) மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் மீதான பயத்தால், ஐதராபாத் விடுதலை தினத்தை கே.சி.ஆர். கொண்டாடவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் விடுதலை தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் உற்சாகமாக கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளில், தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.எஸ்.பி.எஸ்.சி.) கீழ் 6 பிரிவுகளில் தேர்வுத் தாள்கள் கசிந்தன. ஆகவே, வினாத் தாள் கசிவு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவைச் சேர்ந்த 2.5 லட்சம் இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
அதேபோல, பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இங்கு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும். அதோடு, மதிப்பு சங்கிலியை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்கும். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்போம்” என்றார்.