உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி-20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்கக் கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகில் போரை விட ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமையால், நிறைய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் 80 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என உலக நாடுகள் கணித்தன. ஆனால் அனைத்து கணிப்புகளையும் முறியடித்து கொரோனாவில் இருந்து விரைவாக மீண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்ததுடன், 100 கோடி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. பேரிடர் காலங்களில் இந்தியா தகுந்த வழிகளைக் கையாண்டு மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.
காலநிலை மாற்றம் உலக நாடுகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதை இந்தியா சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இந்தியா சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக உலக நாடுகளை இந்தியா ஒன்றிணைத்து வருகிறது.
கோதுமை, நெல் மற்றும் சிறுதானிய உற்பத்தி என விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தண்ணீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் தற்சார்பு கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
இந்தியர்களின் டி.என்.ஏ.வில் ‘அனைவரையும் பாதுகாப்போம் எல்லோருக்கும் உதவுவோம்’ என்ற குணம் இயற்கையாகவே உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற பொருளுடன் ‘ஜி – 20’ மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இதனால் இந்தியாவை ஒரு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன என்று கூறினார்.