மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பல், மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது என 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 மெகா பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்க இந்தியா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எல்லையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தவிர, சீனாவின் இராணுவம் மிகவும் வலுவானதாக இருக்கிறது.
எனவே, சீனா மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல்களை எதிர்கொள்ள இந்தியாவின் இராணுவத் திறன்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில், நவம்பர் 30-ம் தேதி முக்கியக் கூட்டத்தை நடத்துகிறது.
இக்கூட்டத்தில்தான் 3 முக்கியமான திட்டங்களுக்கான “தேவையை ஏற்றுக்கொள்வது” குறித்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதலுக்குப் பிறகு, இறுதி ஒப்புதலுக்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, டெண்டர் மற்றும் வணிகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இத்திட்டத்தின்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட 83 ஜெட் விமானங்களுக்கு துணையாக, மேலும் 97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதாகும்.
மேலும், 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 2-வது உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் (ஐ.ஏ.சி.-2) கட்டுவதாகும். அதேபோல, சியாச்சின் பனிப்பாறை மற்றும் கிழக்கு லடாக் போன்ற பகுதிகளில் உயரமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு 45,000 கோடி ரூபாய் செலவில் 156 பிரசாந்த் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதாகும்.