தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால், பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
சென்னை மாநகரில் உள்ள முக்கிய பகுதியான,புரசைவாக்கத்தில் எவார்ட்ஸ் பள்ளி அருகில் உள்ள அழகப்பா தெருவில் உள்ள பொதுமக்கள் , கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வாகனத்தில் கூட செல்லமுடியாதவாறு அடைத்துள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டி பெரும் குழியை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் துர்நாற்றத்துடன் வெளியேறி சாலை முழுவதும் பரவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அந்தப் பகுதி கவுன்சிலரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.