நாட்டிலேயே மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானாதான். ஆகவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரவினருக்கு வழங்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தெலங்கானா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இக்கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானா மாநிலம் சோமாஜி குடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீண்ட போராட்டத்தின் பின்னணியில் தெலங்கானா உருவானதால், இம்மாநிலத்துக்கும், மக்களுக்கும் இத்தேர்தல் மிகவும் முக்கியமானது.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலங்கானா தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி இருப்பதைக் காண்கிறோம். இந்த 10 ஆண்டுகளில் பி.ஆர்.எஸ். கட்சி ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
மிஷன் பகீரத ஊழல், பாஸ்போர்ட் ஊழல், 4,000 கோடி மியாபூர் நில ஊழல், காலேஸ்வரம் திட்ட ஊழல், மதுபான ஊழல், கிரானைட் ஊழல் என ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று மக்கள் நம்புகிறார்கள். 2 பெட்ரூம் வீட்டுத் திட்டத்திற்காக பி.ஆர்.எஸ். கட்சியினர் தலித் மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள். இவை அனைத்தும் தெலங்கானா மக்களுக்குத் தெரியும்.
மேலும், சமாதான அரசியலிலும் கே.சி.ஆர். ஈடுபட்டு வருவதால் அவரது அரசுக்கு எதிராக மக்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். சமாதான அரசியலால் ஐதராபாத் விடுதலை நாளைக் கொண்டாடுவோம் என்கிற வாக்குறுதியை கே.சி.ஆர். உடைத்து விட்டார்.
நமது அரசியலமைப்புச் சட்டம் யாருக்கும் சிறப்புச் சலுகை அளிக்கவில்லை. ஆனால், நாட்டில் மத ரீதியான இடஒதுக்கீடு வழங்கும் ஒரே ஒரு மாநிலம் தெலங்கானா மட்டுமே. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4% முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு வழங்கி நீதியை நிலைநாட்டுவோம்.
கே.சி.ஆர். ஆட்சியில் மாநில இளைஞர்கள் மனமுடைந்து போய் இருக்கிறார்கள். விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதனால், தெலங்கானாவின் எதிர்காலம் குறித்து சந்தேகம் நிலவுகிறது. எனவே, அனைத்து கட்சிகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து வாக்களியுங்கள்.
உங்கள் வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலங்கானா மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். ஆகவே, ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி வாக்களிக்கும்போது நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.