மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், திட்டமிட்டபடி 29-ம் தேதி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாநில பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், குறித்த காலக்கெடுவுக்குள் அனுமதி கோரவில்லை என்று சொல்லி போலீஸார் அனுமதி தர மறுத்து விட்டனர். இதை எதிர்த்து பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஹிரன்மய் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான்.
மேலும், அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எத்தனையோ பொதுக் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி இருக்க, ஒரு குறிப்பிட்ட கட்சியின் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்க முடியாது. ஆகவே, தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானது. அதில் நாங்கள் தலையிட முகாந்திரம் இல்லை.
மேலும், பொதுக்கூட்டத்திற்கு என போலீஸார் வகுத்திருக்கும் 28 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், அமித்ஷாவின் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.