நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்களை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிப்பதோடு, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்கள் வளர்வதற்கும் தேவையான காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில், காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.
இவை மண்ணின் உறுதித் தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. வழக்கமாக டிசம்பர் மாதங்களில் பூக்கும் தன்மை கொண்ட காட்டு சூரிய காந்தி மலர்கள், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூத்துக் குலுங்கத் தொடங்கி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர், உதகை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் கொத்து கொத்தாக இந்த காட்டு சூரிய காந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
வாசமில்லாத மலராக இருந்தாலும், அவை காண்போரின் கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வகையில், மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கின்றன.
தற்போது, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில், பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து இரசித்தனர்.