பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இன்று தெலங்கானாவில் பிரச்சாரம் செய்தனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் கமரெட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானாவில் மாற்றத்தின் அலை வீசுகிறது. தெலங்கானா மக்கள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். அரசின் 9 ஆண்டுகால ஆட்சியால் சலிப்படைந்து விட்டார்கள். அந்த ஆட்சியிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். இந்த முறை காற்று பா.ஜ.க.வுக்கு சாதகமாக வீசுகிறது.
இங்கு அதிக அளவில் வந்ததன் மூலம் நீங்கள் அனைவரும் தெளிவான செய்தியை கொடுத்திருக்கிறீர்கள். பா.ஜ.க. மீது தெலங்கானா மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று அரசியல் நிபுணர்களுக்கும், டெல்லியில் ஏ.சி. படுக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் நீங்கள் ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். தெலங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
தெலங்கானாவில் மஞ்சள், திறமை, பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தும் இருக்கிறது. எனினும், பி.ஆர்.எஸ். கட்சியின் மோசமான ஆட்சியால் தெலங்கானா சரியான இடத்தைப் பெறவில்லை. ஆனால், தற்போது காலம் மாறி வருகிறது. உங்கள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தெலங்கானாவை பா.ஜ.க. புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
நீங்கள் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். இரு கட்சியினரும் பொய்யான தகவல்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால், உள்ளுக்குள் இரு தரப்பினரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். தெலங்கானாவில் காங்கிரஸுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பி.ஆர்.எஸ்.ஸை வலுப்படுத்தும்.
தாய்மார்கள், சகோதரிகள், கிராம மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கனவு மோடியின் சங்கல்பம் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். பா.ஜ.க. என்ன சொன்னாலும் அதை செய்யும். எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் முத்தலாக்கை ஒழிப்போம் என்று உறுதியளித்தோம். அதைச் செய்து காட்டினோம்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து, பெண்களுக்கு இடஒதுக்கீடு, இராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்று உறுதியளித்தோம். அதையும் நாங்கள் நிறைவேற்றினோம். அதேபோல, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதியளித்தோம். அதுவும் தற்போது நடந்து வருகிறது. தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து, அதையும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது.
மதிக சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை பா.ஜ.க. புரிந்து கொண்டிருக்கிறது. இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நேற்று டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்” என்று கூறினார்.