காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா வேதனை தெரிவித்திருக்கிறார்.
கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார். இவர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கொலையில் கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கனடாவில் இருக்கும் 2 தூதர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.
இதனிடையே, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தபோதும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டார்.
பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டின் தூதரை வெளியேற்றியது. மேலும், கனட பிரஜைகளுக்கு இந்திய விசா வழங்குவதை தற்காலிக நிறுத்தி வைத்ததோடு, கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. இதனால், 42 கனடா தூதர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மேற்கண்ட விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா முதல்முறையாக கனட ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அப்பேட்டியில் சஞ்சய் குமார் வர்மா, “ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், அதற்கு நீங்கள் ஏற்கெனவே குற்றவாளியாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
எனவே, நாங்கள் அதை மிகவும் வித்தியாசமான விளக்கத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என்று உறுதியுடன் கூறுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.