உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக செங்குத்தாக துளையிடும் இயந்திரம் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 14வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் (auger drilling machine) பழுதடைந்ததால் நேற்று மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, துளையிடும் பணியின் போது ஆகர் இயந்திரத்தால் மீண்டும் மீணடும் தடை ஏற்பட்டது. எனவே செங்குத்து துளையிடல் மற்றும் மனிதர்கள் மூலம் துளையிடும் பணி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாங்கள் திறக்க முயற்சிக்கும் ஒவ்வொரு கதவுக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. நாங்கள் மலையைச் சமாளிக்க வேண்டும். என்ன நடக்கும் என தெரியாது. கதவுகளை திறக்க முயற்சி செய்கிறோம். மலை நிலையற்றது. விரைந்து செல்வது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.
சுரங்கத்தில் சிக்கியவர்கள் மற்றும் மீட்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே சுரங்கப்பகுதிக்கு சென்ற உத்தரகாண்ட் முதலமைச்சர் மீட்பு பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் காப்பாற்றுவதே நமது முன்னுரிமை என அவர் தெரிவித்தார்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு ஏதுவாக சில்க்யாரா சுரங்கப்பாதையில் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வசதியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே செங்குத்து துளையிடும் இயந்திரத்தின் ஒரு பகுதி சில்க்யாரா சுரங்கப்பாதையின் மேற்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.