கேரள மாநிலம் கொச்சி அருகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகேயுள்ள களமச்சேரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பிரபல பின்னணிப் பாடகி நிகிதா காந்தியின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றதால், இசைக் கச்சேரியை ரசிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள் அல்லாதோறும் குவிந்திருந்தனர். இதனால் திறந்தவெளி அரங்கம் நிரம்பி வழிந்தது. ஆகவே, அரங்கிற்கு வெளியேயும் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர்.
இந்த சூழலில், நிகழ்ச்சியின் இடையே திடீரென மழை பெய்தது. எனவே, மழையில் நனையாமல் இருக்க மாணவர்கள் மேடையை நோக்கியும், பாதுகாப்பான இடத்தை நோக்கியும் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் என 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 64 பேர் காயமடைந்தனர். இவர்கள் களமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோழிக்கோடுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் மாணவர்கள் உயிரிழந்த தகவலறிந்ததும், கோழிக்கோடு விருந்தினர் மாளிகையில் அலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த நவகேரளா சதாஸ் நிகழ்ச்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.