மும்பை கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நமது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான் அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது என்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 100-வது எபிசோடை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று நடந்த மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது, தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
நாட்டில் கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நம் நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேசமயம், இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாளாகும். 1949-ம் ஆண்டு இதே நாளில்தான், அரசியல் அமைப்பை, அரியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது.
ஆகவே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைத் உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களானது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமாகி இருக்கிறது. உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம்தான், நாட்டிற்கு பல வாய்ப்புகளை திறந்திருக்கிறது.
நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்திருக்கிறது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்திருக்கிறது.
சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்டபோது, உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது.
மேலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. தண்ணீரைப் பாதுகாப்பது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் குறைவானதல்ல.
தண்ணீரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. தேசத்தை கட்டியெழுப்புவதில் பொதுமக்களும் பங்கு கொள்ளும்போது, அது நாட்டை முன்னேற்ற பாதைக்குக் கூட்டி செல்கிறது. இன்று, இந்தியாவில் மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா நிறைய சாதனைகளை புரிந்திருக்கிறது.
மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 2-வது ஆண்டாக ரொக்கமாக பணம் செலுத்தும் பழக்கம் குறைந்திருக்கிறது. மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகின்றனர். டிஜிட்டல் புரட்சியின் வெற்றி இதை சாத்தியமாக்கி இருக்கிறது.
இன்னொரு காரியம் செய்யலாம், ஒரு மாதத்திற்கு யு.பி.ஐ. மூலமாகவோ அல்லது எந்தவொரு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்துவது என்று முடிவு செய்யுங்கள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, உங்கள் அனுபவங்களையும் புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.