பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை ‘மஞ்சள் நகரமாக’ மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதாக அறிவித்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, இக்கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் மேடக் மற்றும் நிர்மல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானாவில் முதல்முறையாக இத்தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். தெலங்கானாவில் நிச்சயமாகத் தாமரை மலரும்.
இந்த நாள், நாடு ஒரு பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியானது. இத்தாக்குதலில் பல அப்பாவி மக்களை இழந்தோம். திறமையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கங்கள் நாட்டிற்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
பலவீனமான காங்கிரஸ் அரசை 2014-ல் அகற்றி, வலுவான பா.ஜ.க. ஆட்சியை அமைத்தீர்கள். இதன் காரணமாக இன்று நாட்டில் இருந்து தீவிரவாதம் அழிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர்., மாநிலத்தை தனது சொத்தாகக் கருதுகிறார். கே.சி.ஆருக்கு வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் ஏன்? அவர் ஏன் அங்கு செல்ல வேண்டும்? காங்கிரஸின் ராகுல் காந்தியும் ஏன் அமேதியை விட்டு கேரளாவுக்கு ஓட வேண்டும். இதற்கு விவசாயிகள் மற்றும் ஏழைகளின் கோபம் ஒரு முக்கிய காரணம் என்றால், பா.ஜ.க. வேட்பாளர் ஏட்டல ராஜேந்தர் மற்றொரு காரணம்.
திட்டங்களை தருவதாக வாக்குறுதி அளித்த கே.சி.ஆர்., மோசடிகளை மட்டுமே கொடுத்தார். உங்கள் குழந்தைகளுக்காக உழைக்காமல், தனது குழந்தைகளுக்காகவும், உறவினர்களுக்காகவும் உழைத்து, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தனது செல்வத்தை பெருக்கிக் கொண்டார். ஆகவே, தெலங்கானா விவசாயிகள் கே.சி.ஆரை நிரந்தரமாக பண்ணை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்கள்.
பி.ஆர்.எஸ். கட்சி உங்களுக்கு துரோகத்தைத் தவிர வேறெதையும் கொடுக்கவில்லை. தெலங்கானா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி இருக்கிறது. இன்று பாசன ஊழல்களுக்கும் பெயர் பெற்றிருக்கிறது. உங்களின் எதிர்காலத்தை கே.சி.ஆர். கவனிப்பதில்லை. தனது சொந்தக் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறார்.
மேலும், பி.ஆர்.எஸ். அரசு மாநிலத்தில் ஏழைகளுக்கான வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆனால், தெலங்கானாவின் ஏழைகள் மீது பா.ஜ.க. அக்கறை கொண்டிருக்கிறது.
கே.சி.ஆர். ஏழைகளின் எதிரி. தெலங்கானாவில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் ஏழைகளுக்கான வீடுகள் அமைக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம்.
பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை ‘மஞ்சள் நகரமாக’ மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. இது மாநிலத்தின் மஞ்சள் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதாக அறிவித்திருக்கிறோம்.
அதேபோல, இன்று இந்தியா பொம்மை ஏற்றுமதியில் புதிய சாதனை படைக்கிறது. ஆனால், நிர்மலின் பொம்மை தொழிலை அழிப்பதில் பி.ஆர்.எஸ். மும்முரமாக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நிர்மலின் பொம்மை தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் பிரச்சாரத்தை தொடங்குவோம்” என்றார்.