ஆசிரியை லதா என்பவரிடம் ரூ.70 லட்சம் ரொக்கம், 63 சென்ட் நிலம் ஆகியவற்றை மோசடி செய்த, தேனி மாவட்ட திமுக நிர்வாகியான ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்காட்டான் குளம் பகுதியைச் சேர்ந்த, அருணாசலம் என்பவரது மனைவி லதா. இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
யோகா பயிற்சி வகுப்பு சம்பந்தமாக, கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சின்னகந்தன் என்பவரது மகன் ராமகிருஷ்ணன் என்பவருடன் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து, லதாவின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி, பல்வேறு தவணைகளில் ராமகிருஷ்ணன் சுமார் 70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
மேலும், கம்பம் அருகே உள்ள லதா குடும்பத்தினருக்கு சொந்தமான 63 சென்ட் நிலத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறி, தனியார் பைனான்ஸில் ரூ. 25 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஆசிரியை லதா ஆவேசம் அடைந்து, ராமகிருஷ்ணனிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது, லதாவுக்கு, ராமகிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து, தேனி மாவட்ட காவல்துறையில் லதா புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமகிருஷ்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.