மலேசியா வரும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏராளமான இந்தியர்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். மேலும் சிங்கப்பூர், மலேசியாவில், இந்திய வம்சாவழியினர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலேசியா வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் விசா இன்றி தங்கலாம் என அந்நாடு அறிவித்துள்ளது. புத்ராஜெயாவில் நடந்த மக்கள் நீதிக் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் அன்வர் இப்ராகிம் பங்கேற்று பேசினார். அப்போது, டிசம்பர் 1 முதல் மலேசியாவிற்கு வரும் சீனா மற்றும் இந்திய குடிமக்களுக்கான நுழைவு விசா தேவைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
மலேசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4-வது இடத்தில் உள்ளது. மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனாவில் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.