திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அவரை ஆந்திர கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருமலைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள வி.ஐ.பி. விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர், இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
காலை 8 மணியளவில் கோவிலுக்கு வந்த அவரை, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தங்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
At the Sri Venkateswara Swamy Temple in Tirumala, prayed for the good health, well-being and prosperity of 140 crore Indians. pic.twitter.com/lk68adpgwD
— Narendra Modi (@narendramodi) November 27, 2023
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில், 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.