நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ‛ஆதித்யா எல்-1′ திட்டங்களைத் தொடர்ந்து, வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சமீபகாலமாக சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் திட்டமிட்டபடி, 40 நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்ஞான் ரோவர் நிலவில் தடம் பதித்து தனது ஆய்வுகளைத் தொடங்கியது.
இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்கிற பெருமையும், நிலவில் தடம் பதித்த 4-வது நாடு என்கிற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.
இதைத் தொடரந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தி இருக்கிறது.
இந்த விண்கலம் தற்போது சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி எல்-1 புள்ளியில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்பாடுகளை பெங்களூருவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்ததாக வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது. சுக்ரயான் மிஷன் என்று அழைக்கப்படும் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “சந்திரயான், ஆதித்யா எல்-1 ஆகியவற்றைத் தொடர்ந்து ‘வீனஸ்’ குறித்து ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருக்கிறது.
இத்திட்டம் முழுமையாக வளர்ச்சி அடைந்து விட்டது. எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலம் நச்சுத்தன்மையுடையதாக மாறும். இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.