மார்க் ஆண்டனி படத்திற்காக, சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால், இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ. 6.5 லட்சம் இடைத்தரகர் மூலம் பெற்றதாக விஷால் புகார் தெரிவித்தார். அத்துடன், பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்டார்.
புகாருக்கு உள்ளான இடைத்தரகர்கள், அதிகாரிகள் மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதனிடையே, முபையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இடைத்தரகர்களின் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த வகையில், நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்கு மூலம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.