சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் அரசுப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சிறகை விரி, சிகரம் தொடு’ என்ற தலைப்பில், பள்ளி ஆண்டு மலரை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.
இதை அடுத்து அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.
சந்திரயான்-2, 3-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. ‘பிரக்யான் ரோவரை உயிர்பித்தாலும், விக்ரம் லேண்டர் வழியாகத் தான் செய்தி பரிமாற்றத்தைக் கொடுக்க முடியும். இதனால், பூமிக்கு இனி புதிதாகச் செய்திகள் வரும் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பில்லை.
நிலவு ஒரே வட்டப்பாதையில் வராமல் மெதுவாக விலகிச் செல்கிறது. இதை, இப்போது நாம் வைத்துள்ள விக்ரம் லேண்டர் மூலமாக இன்னும், 70 ஆண்டுகளுக்கு அறிய முடியும். அதன் மூலம் வருங்காலத்தில், நிலவிற்கு மனிதனை அனுப்புவது மற்றும் பிற காரியங்களுக்கு உதவ முடியும்.
சந்திரயான்-3ல் அனுப்பிய விண்கலன், 3.50 இலட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்க்கிறது. அதிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளை வைத்து பார்த்தால், பூமியை ஒத்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பார்க்க முடியும்.
நிலவின் தென்துருவம் மிகவும் கடினமான பகுதி. பல நாடுகள் முயன்றும் கூட செல்ல முடியவில்லை. அதில் நாம் இறங்கினோம் என்பது, தொழில்நுட்ப ரீதியாக, இனி நாம் அங்குச் சென்று இறங்கவும், அங்கிருந்து கனிமங்கள் மற்றும் ஆளில்லா விண்கலங்களை எடுத்து வரவும் முடியும்.
பூமியைச் சுற்றி, 400 கிலோமீட்டரில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது. எனவே, புதிய விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் நிரந்தரமாக உருவாக்க வேண்டும். இதனால், சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.
பூமியின் சுற்றுப்புற சூழ்நிலையைத் துல்லியமாக அறிய, இந்தியா, அமெரிக்கா இணைந்து செய்யும், நிசார் விண்கலம் இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது என்று கூறினார்.