செயல்படாத மற்றும் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
கூகுள் நிறுவனத்தின் இ மெயில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, யூடியூப், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப்ஸ், காலண்டர், கூகுள் ஸ்லைட்ஸ், கூகுள் ஷீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பலரும் கணக்குகள் தொடங்கியதோடு சரி, நீண்ட காலமாக அதை பயன்படுத்தாமலேயே வைத்திருக்கின்றனர். இதுபோன்ற செயல்பாடில்லாத கணக்குகள், சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள், டிசம்பர் 1-ம் தேதி முதல் நிரந்தமாக நீக்கப்படும் என்றும், எனவே பயனர்கள் இந்த வார இறுதிக்குள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மேலும், இது தொடர்பாக பயன்படுத்தப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், மாற்று மின்னஞ்சல் முகவரிக்கும் கூகுள் எச்சரிக்கை செய்தி அனுப்பி வந்தது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி செயல்படாத கணக்குகள் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.