பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்தனர். கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு புறப்பட்ட IAF Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் சென்ற நிலையில், தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து குன்னூர் காவல்துறையினர் CrPC 174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விசாரணையை கைவிடுவதாக தமிழக போலீசார் அறிவித்துள்ளனர். ஹெலிகாப்டரின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கிடைக்காத நிலையில் விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்த தகவல்கள் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் வரும் என்பதால் அதனை அளிக்க சூலூர் ராணுவ விமான அதிகாரிகள் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே விபத்திற்க்கு காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.