மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோராம் மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
அதேசமயம், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி முதல்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதி 2-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதன் பிறகு, 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு கடந்த 25-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, 2003-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 முறை பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. கடந்த 17-ம் தேதி நடந்த தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், “டிசம்பர் 3-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் 5-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மாநிலத்தில் பா.ஜ.க. செய்த பணிகளுக்கு மக்கள் ஆசி வழங்குவார்கள்” என்றார்.