தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்.
சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 2,229க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக, பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.